நெடுநல்வாடை குறிப்பு வரைக

நெடுநல்வாடை

🏀நெடுநல்வாடையின் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார்.

🏀நெடுநல்வாடை தலைவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளான்.

🏀188 அடிகளில் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இந்நூல்.

🏀 ஒரு அகப்பொருள் பாடலாகவே விளங்குகின்றது.

🏀 அரசனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவியின் துன்பம் நீங்குமாறு ‘பகைவரை வென்று வேந்தன் விரைவில் வருவானாக’ என்று கொற்றவையைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

🏀 நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை ஆகும்.

🏀 தலைவன் போர்மேல் செல்லுதற்குரிய கூதிர், வேனில் என்னும் இரண்டு பருவங்களில் கூதிர்ப்பருவத்தில் போர்மேற்சென்ற அரசன் பாசறைக்கண் தங்கி இருந்தானாக அவனது உரிப்பொருள் பிரிவினால் தலைவி வருந்துதலாகிய அமையப் பாடப்பட்டுள்ளது. 

🏀 பகைமேற் சென்ற தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியின் துயர் தீர வேண்டி அரசவைப் பெண்டிர் கொற்றவையை வழிபடுவது இப்பாடலின் துறை ஆகும்.

🏀 பொதுவாகச் சங்கப் பாடல்களில் வடசொல் கலப்பு புறக்கணிக்கப்படும் ஆனால் நெடுநல்வாடையில் வடசொல்லும் பிராகிருதமும் ஆங்காங்கே கலந்துள்ளன.

நெடுநல்வாடை பெயர்க்காரணம்

🏀 கூதிர்காலத்து வடதிசைக் காற்றாகிய வாடை, பாசறையில் தங்கி போகத்தில் மனம் செல்லாது தான்மேற்கொண்ட நாடுகாவலாகிய தன் கடமையில் கருத்தூன்றி இருந்து வினை முடிக்கக் காரணமாய் இருந்ததனால் அரசனுக்கு நல்ல வாடையாகவும்; பூ இடைப்படினும் ஆண்டொன்று கழிந்ததுபோல் அவதியுறும் அன்றில் பறவைபோல், தலைவனைப் பிரிந்து தனிமையில் வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுதும் ஓர் ஊழிபோல் நெடியதாகி வருத்தும் இயல்பினதாயின் நெடுவாடையாகவும் இருத்தலின் இது நெடுநல்வாடை` எனப் பெயர் பெற்றது.

🏀 இதில் கூறப்படும் பாசறை கூதிர்ப் பாசறையாகும். பிரிந்த தலைவிக்குத் துன்பமும், வினை முடித்த தலைவனுக்கு இன்பமும் நல்கிய வாடைக் காலத்தைப் பற்றிக் கூறும் இந்நூலின் பெயர்ப் பொருத்தத்தை ஆராய்ந்த தமிழ்த் தென்றல் திரு வி.க. அவர்கள் ‘வாடை துன்பத்தைக் குறிப்பது: நல்ல என்பது அன்பை உணர்த்துவது.

🏀 நெடு என்பது அழியாமையைக் தெரிவிப்பது, எனவே, அழியாது நீளும் நல்வாடை” என்று விளக்கம் தருவர்.

🏀 பிரிந்து வருந்துவது பாலைத் திணைக்குரிய பகைப் உரிப்பொருள்.

🏀 வினைமேற்சென்ற வேந்தன், புலத்தில் பாசறை அமைத்து வெற்றி பெறுவது வாகைத் திணைப் பொருளாகும்.

🏀எனவே பாலைக்குப் புறத்திணை வாகை எனும் தொல்காப்பியக் கருத்திற்கியைபுடைத்தாய் அமைந்திருப்பது அறியற்பாலது.

🏀 வணங்காத பகைவரை நாடிச் செல்வதால் வஞ்சித்திணைப் பொருளதாகவும் கொள்ளலாம்.

🏀 அகத்திணைக்குரிய பிரிவுச் செய்திகளே இதில் பெரிதும் இடம் பெற்றிருத்தலின் இது பாலை என்னும் அகத்திணைக்குரியதாகவே கூறப்படுகிறது.

🏀 வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்’ என்று பாண்டியனது அடையாள மாலையாகிய வேப்பமாலையைக் குறிப்பிடும் தொடர் வருவதால் இஃது புறப்பாட்டும் ஆயிற்று.

🏀 பண்டிதமணி கதிரேசஞ் செட்டி யார் இதனை அகப்பாட்டு என நிறுவியுள்ளார்.

🏀 இவ்வாறு நுண்ணிய வேறுபாட்டையும் நுணுகியறிந்து பிரித்து எண்ணும் உயர்ந்த தூய தமிழிலக்கிய நெறி வியந்து போற்றற்குரியது.

🏀 கூதிர்கால வருணனை, முழுவலி மக்களாகிய மிலேச்சர் நகரைச் சுற்றிக் காவல் செய்தல், மாலைச் காலத்தில் மகளிர் வழிபாடு போல்வன இப்பாட்டின் தொடக்கமாகும்.

🏀 இந்நூலில் இடம் பெற்றுள்ள கூதிர்கால வருணனை (45-70) இலக்கிய நயமும் ஓவிய எழிலும் இணைந்தவை.

🏀 குளிர் காலத்தில் பயன்படாது கிடந்த பொருட்கள் பட்டியலிட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

🏀 கூதிரின் கொடுமையை ‘மாமேயல் மறப்பு, மந்தி கூரப் பறவை படிவன வீழக், கறவை கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள்’ (நெடுநல் 9-12) என்ற வரிகளால் விளக்குகின்றார்.

🏀 கொடுமையால் விலங்குகள் மேய்தலை மறக்க, குரங்குகள் வாடையின் குளிரால் நடுங்க, மரத்தில் தங்க வரும் பறவைகள் தரையில் விழ, கறவைப்பசு பாலருந்த வரும் கன்றுகளை உதைக்க குன்றங்களும் குளிரால் நடுங்க வாடைக்காற்று வீசியது என்கிறார். கூதிர் காலத்தின் கொடுமையை இதைவிட வேறுயாராலும் அழகுற அருமையாகக் கூறமுடியாது.

🏀 மகளிர் தொடங்கியதும் பித்தியரும்பு மலர்ந்து மாலைக்காலம் மணம் வந்ததென அறிந்து கொண்டனர். இவ்வாறு மலர்களே மங்கையர்க்கு மணி வீசத் காட்டிகளாகப் பயன்பட்ட பாங்கினை

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து

அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து (39-41)

எனும் அடிகள் விளக்கும்.

🏀 கூதிர்கால வருணனையோடு, மழை பொழிந்தமை, அந்திப் பொழுதில் மக்கள் தத்தம் வீடுகளில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தமை, குளிரால் குலைந்த யாழ் நரம்புகளைச் சூடேற்றி இசைபாடும் இயல்பு முதலியனவும் அழகுறக் கூறப்பட்டுள்ளன.

வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுகக்

குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில்

எனும் வரிகள் வேழம் புகுந்து செல்லுமளவிற்குக் குன்றுகள் போன்ற உயர்ந்த நிலைகளோடு மாடங்களைக் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருந்த கூடிய சிறப்பைச் செப்புகின்றன.

🏀 இதில் கூறப்படும் பாசறை கூதிர்ப்பாசறை. குளிர்கால வாடையின் கொடுமை, அரண்மனை அமைப்பு சுட்டிலின் சிறப்பு. தலைவியின் பிரிவுத்துயரம் தோழியரும் செவிலியரும் அவளைத் தேற்றுதல், அரசியின் கற்புநிலை, அரசன் வீரரிடம் கொண்ட பரிவு முதலியன கூறப்பட்டுள்ளன. பூமலர்தல் கொண்டு பொழுது அறிவது. பிரிந்துறை மகளிர் தம்மை ஒப்பனை செய்யாமை தீவட்டியுடன் சென்று அரசுன் போரில் புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறல் மாலைக் காலத்து மகளிர் கொண்டாட்டம் ஆகிய சிறப்புச் செய்திகள் மொழியப்பட்டுள்ளன. திருப்பரங்குன்ற விழா திருவோணநாள் விழா அந்திவிழா, எழு நாள் விழா நன்னை பிறந்த நாள் விழா ஆகிய விழாக்கள் பற்றியும் நாளும் கோளும் அறிந்து செயல்படும் வழக்கம் பற்றியும் நெடுநல்வாடை கூறு கிறது. யவனரின் பாலை விளக்கும் அவர் நகரில் காவல் புரிவதும் நெடுநல்வாடையில் சுட்டப்பட்டுள்ளன.

🏀 அணி செய்யாது கட்டிலில் படுத்துக் கிடக்கும் பாண்டிமா தேவியைப் புனையா ஓவியம் என்ற தொடரால் குறிப்பிடுதல் பாராட்டற்குரியது.

🏀 இறுதியில் போர்மேற்சென்ற அரசனின் வீரமும், பரிவும் புகலப்பட்டுள்ளன.

🏀 பாசறையில் உறக்கம் வராது உழன்ற மன்னன் நள்ளிரவில் தீவட்டி ஏந்தி ஏவலர் உடன் வர போரில் புண்பட்ட வீரர்களைக் கண்டு ஆறுதல் பெற இன்மொழி இயம்பும் அருட்பண்பு, உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

🏀 பள்ளியறைக் இவ்வாறு அரசியின் காட்சியையும், அரசனின் பாசறைக் காட்சியையும்

புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு

இன்னா அரும்படர் தீர விறல்தந்து

இன்னே முடிகதில் அம்ம

எனவும்

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

என்று வரும் அடிகளில் திறம்பட விளக்குகிறார்.

🏀 இப்பாட்டில் யவனர் இயற்றிய பாவை விளக்கும், உடல் வலிமிக்க மிலேச்சர் நகரினைக் காப்பதும் கூறப்படுகின்றன.

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

தேஎங் தொண்டு தெய்வநோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து

என்ற அடிகளின் மூலம் மக்களிடம் நாளும் கோளும் பார்க்கும் வழக்கம் இருந்தது அறியப்படுகின்றது.

🏀 அந்தப்புரத்தில் தங்கக் கட்டிலில், தலைவன் பிரிவால் பட்டு நீக்கித் துகில் உடுத்தி புனையா ஓவியம்போல், தலைவி கட்டிலின் மேல்விதானத்தில் அமைந்த திங்களைச் சார்ந்திருக்கும் ரோகிணியைக் கண்டு இதுபோன்று தலைவனைப் பிரியா வாழ்வு நமக்கில்லையே என ஏங்கும் காட்சி அக்கால மக்களின் வானவியல் அறிவைப் புலப்படுத்துகின்றது.

🏀 அன்புச் சித்திரமாகத் திகழும் இந்நெடுநல்வாடைக் காட்சிகளைக் கற்றுக் களித்த தமிழ்த்தென்றல் திரு. விக அவர்கள்  நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம், நக்கீரர் கண்ட சுரங்கம், தமிழ்ச் சுரங்கம் பாராட்டுகின்றார்.

🏀 நெடுநல்வாடையின் நலனில் நெஞ்சம் பறிகொடுத்த கு. கோதண்டபாணி பிள்ளை அவர்கள் நெடுநல் வாடையின் சிறப்புக்களைத் திரட்டி நெடுநல்வாடை பாநயன்` என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

🏀 செ. வேங்கடராமச்சந்திர செட்டியார் அவர்கள், புனையா ஓவியம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

Leave a Reply

Translate »