நாலடியார் என்றால் என்ன?

Tamil Classic Naladiyar Educational Poster

🌻திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்பாக எண்ணப்படும் நூல் இதுவே.

‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்‘

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி

🌻நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி‘ – என வழங்கும் பழமொழிகள் இதன் சிறப்பை விளக்கும்.

🌻ஈரடிகளால் வள்ளுவர் சுருக்கமாக உரைத்துள்ள கருத்துக்களை நான்கடி வெண்பாக்களால் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் பான்மையனவாய் இதன் பாடல்கள் அமைந்துள்ளன.

🌻வடிவாலும் கருத்தாலும் குறளின் விரிவாக்கமாகத் திகழும் இதனைத் ‘திருக்குறளின் விளக்கம்‘ என்றே கொள்ளலாம்.

🌻நான்கடிகளைக் கொண்ட வெண்பாக்களால் இயன்றமை பற்றி நாலடி என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆர் என்னும் சிறப்பு விகுதியும் சேர்ந்து ‘நாலடியார் என்று வழங்கப்படலாயிற்று.

🌻நானூறு வெண்பாக்கள் இடம் பெற்றிருந்தமையால் எண்ணிக்கையால் பெயர் பெற்றச் சங்க நூல்களான அகநானூறு, புறநானூறு என்பன போன்று இதுவும் ‘நாலடி நானூறு‘ என்று வழங்கப்படுவதாயிற்று.

🌻இது ‘வேளாண் வேதம்‘ எனவும் குறிக்கப்படுகின்றது.

🌻நாலடியாரில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களும் 12 இயல்களும், 400 வெண்பாக்களும் உள்ளன.

🌻இதுவும் குறளைப் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது.

🌻ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

🌻இதன் சிறப்பினை உணர்ந்த டாக்டர். ஜி.யு.போப் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

🌻இந்நூல் சமண முனிவர்களால் பாடப்பட்டது ஆகும்.

🌻இது பற்றிக் கர்ணபரம்பரையாகக் கதையொன்று வழங்கி வருகின்றது.

🌻அதாவது, எட்டாயிரம் சமண முனிவர் பஞ்சத்தால் வருந்தி பாண்டிய நாடடைந்து, வாழ்ந்திருந்தனர். சிறிது காலத்தில் பஞ்சம் தீர்ந்திடத் தம் நாடு செல்லக் கருதியபோது சான்றோரைப் பிரிய மனமில்லாத பாண்டிய மன்னன் விடைதர மறுத்தான். வேறு வழியறியாத புலவர்கள் ஆளுக்கொரு பாடலியற்றித் தம்படுக்கையில் வைத்து விட்டுப் பாண்டியன் அறியாதவாறு பிரிந்து சென்றனர்.

🌻அறிஞரின் இந்த எதிர்பாராத பிரிவினால் சீற்றம் கொண்ட பாண்டியன், அவர்களின் பாடல் ஏடுகளையெல்லாம் வைகையில் எறியச் செய்தான். அவ்வாறு எறியப்பட்ட ஏடுகளுள் 400 பாடல் ஏடுகள் நீர்ப்போக்கை எதிர்த்து வர, அதுகண்ட பாண்டியன் அவற்றைச் சேர்த்துத் தொகுத்தனன். அதுவே ‘நாலடியார்’ என்பதே அவ்வரலாறு.

🌻இக்கதை எந்த அளவிற்கு உண்மையாயினும் இதினின்று இரண்டு உண்மைகள் பெறப்படுகின்றன:

  1. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நூல்,

  2. இது ஒரு தொகுப்பு நூல்,

🌻நச்சினார்க்கினியர் தனது சிந்தாமணி உரையுள் – சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட ‘நாலடியார்’ என்று கூறி இருப்பதாலும், சில தனிப்பாடல்களாலும் இக்கருத்து தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.

🌻இந்நூலில் பெருமுத்தரையர் என்பவர் பற்றி இரண்டி இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

🌻இவர். தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண் சிற்றரசர்கள். முதலாம் பரமேச்வரப் பல்லவன் காலத்திலும் இம் முத்தரையர் சிறந்து விளங்கிய காரணத்தால் இந்நூலும் கிபி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களின் கருத்து.

🌻பாண்டியருக்கும் முத்தரையர் என்ற பெயருண்டு எனக் கூறி, நாலடியாரின் காலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்பர் சிலர்.

🌻நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர் ‘பதுமனார்’, ஆவார்.

🌻அதிகாரங்களை முப்பாலாகப் பகுத்து உரைகண்டவர் ‘தருமர்’,

🌻பதுமனாரும் ஓர் உரை எழுதியுள்ளார்.

🌻நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது – ‘நாலடியார் உரைவளம்’ என்னும் நூல்.

🌻நாலடியாரால் அக்காலப் பழக்க வழக்கங்களையும், சமய நம்பிக்கைகளையும் நன்கு அறியலாம்.

🌻உரையாசிரியர்கள் இதன் செய்யுட்களைப் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளனர்.

🌻எக்கருத்தையும் உள்ளத்தில் பதியுமாறு எடுத்துரைப்பது நாலடியாரின் கனிச்சிறப்பு.

கல்வியின் சிறப்பைப் பற்றி நாலடியார் கூறும் திறம் சீரியதாகும்.

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு‘

‘கல்வி கரையில்; கற்பவர் நாள் சில;

மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே; நீர் ஒழியப்

பால் உண் குருகின் தெரிந்து‘

“யானை அனையவர் நண்புஓரீஇ நாயனையார்

கேண்மை தழீ இக் கொளல் வேண்டும் – யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்”     (நட்புப் பற்றி)

“விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம்” (துறவு 6:1)

“நாவின் கிழத்தி உறைதலால் சேராளே

பூவின் கிழத்தி புலந்து‘

என்பது கல்வியும் செல்வமும் ஓரிடத்தில் சேர்வதில்லை என்ற உலக வழக்கு உணர்த்தும்,
‘ஒருவர் பொறை இருவர் நட்பு‘

🌻‘மகனறிவு தந்தையறிவு‘ என்பன நாலடியாரில் வரும் பழமொழிகள்

🌻பாற்சோற்றில் நெய் பெய்து உண்ணுதல், பிறன்மனை விழைவோர்க்குக் கொலைத் தண்டனை போன்ற அன்றைய வழக்கங்களும் நாலடியாரில் சுட்டப்பட்டுள்ளன.

🌻நாலடியார் இலக்கியச் சுவையும் உவமையழகும் வாய்ந்தது.

🌻நாலடியார் என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Leave a Reply

Translate »