🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.
🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும். 234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை. திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
🌻 175 புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் யார் அறியக்கூடவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியாராவர்.
🌻 நற்றிணைப் புலவர்கள் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் – வண்ணப்புறக் கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங் கண்ணனார், தும்பிசேர்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் எனும் எழுவராவர்.
🌻நற்றிணைப் பாடல்கள் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பல பழக்க வழக்கங்களை அறியப் பெரிதும் துணை செய்கின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றையும் புலவர்களின் உவமைத்திறம், உள்ளுறை, உவமம் ஆகியவற்றையும் இதில் கண்டு தெளியலாம்.
🌻காதலன் பிரிவால் வருந்தும் தலைவி, தலைவன் வரவைச் சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கமும்,
🌻காற்பந்து விளையாடும் வழக்கமும் மகளிர் வாழ்வில் இருந்ததை அறிய முடிகிறது.
🌻பிற்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்றிலக்கியமான ‘தூது’ எனும் இலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பண்பையும் இந்நூலில் காணலாம்.
🌻’நீரின்றமையாவுலகு’, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்’, குறட்கருத்துக்களையும் ‘விருந்தோம்பல்’ போன்ற பலவும் காணமுடிகிறது.
🌻இந்நூலில் 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் அறியமுடிவில்லை. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914 ஆம் ஆண்டில் இதற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவரை அடுத்து பிள்ளையவர்கள் விளக்கமான பேருரை ஒன்று எழுதி ஒளவை. துரைசாமிப்பிள்ளை வெளியிட்டுள்ளார்.
🌻தலைவியின் தன்னிகரற்ற அன்பைக் கற்பனை வளத்துடனும், கவி நயத்துடனும் ஆங்காங்கு கையாளப் பட்டிருப்பதைக் காணலாம்.