Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்
நூலின் பெயர் : தமிழர் வீரம்
ஆசிரியர் பெயர் : டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் கோனார் மாளிகை 14, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14
முதற்பதிப்பு : 1947
பதினோராம் பதிப்பு : 2001
பன்னிரண்டாம் பதிப்பு : 2007
ISBN : 978-81-8379-408-4
மொத்த பக்கங்கள் : 111
விலை : ரூ.25.00
அனைத்து புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்.
இந்நூலில் உள்ளுறையாகக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஆய்வின் அடிப்படையில் மிகத்தெளிவான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. மேலும் தக்க சான்றுகளுடன் தரப்பட்டு ஒவ்வொரு பக்கத்தின் கீழும் அடிக்குறிப்புகளாக அமைந்திருப்பது சிறப்பு. 1. தமிழ்க்கொடி யேற்றம் 2, தமிழர் படைத்திறம் 3. தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் 4. மான வீரம் 5. வடதிசை வணக்கிய வீரம் 6. கடலாண்ட காவலர் 7. தமிழ்நாட்டுக் கோட்டைகள் 8. பெண்ணை நாட்டுப் பெருவீரர் 9. தியாக வீரம் 10. வீர விளையாட்டு 11. வீர மாதர் 12. வீரக்கல் 13. வீர விருதுகள் 14, பேர் தெரியாப் பெருவீரர் 15. வீரப் புகழ்மாலை முடிவரை திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரையாகக் கூறியுள்ளார். தமிழர் வீரம்’ என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ்வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக்கழகத் தலைவராம் திரு. ராஃபி. சேதுப்பிள்ளை அவர்கள். “சொல்லின் செல்வர்” என வளமலி புலமை இளந்தமிமுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்? நூல் நோட்ட வண்ணக்கர் மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் தூண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும். தமிழில் சிறந்த செய்யுட்கள் எல்லாம் அகம், புறம் என்னும் பொருட்செல்வக் கருவூலங்களாகும். அகப் பொருள் நூல்கள் அனைத்தும் காதற் களஞ்சியங்கள். புறப்பொருள் நூல்களில் பழந் தமிழரது பேராண்மையும் அவரது போர் அறத்துறையும் பேசப்படும். தமிழ்ப் பொருநர் வீரம், இகவார் மேற் படையெடுக்கும் இழிவை இகழும்: வெற்றி வெறியிலும் வீழ்வாரை நலியும் சிறுமையை வெறுக்கும். தமிழர் போர் அற ஒழுக்கம், வெட்சி-வஞ்சி-உழிஞனை-தும்பை-வாகை என்றைந்திறப்படும். பகைவரை எச்சரியாமல் மெய்வீரர் போர் தொடங்கார். அவ் வெச்சரிப்பின் பொதுவகையே வெட்சித்திணை (ஒழுக்கம்) ஆகும். படையெடுப்பு வஞ்சி எனப்படும். பகைவர் அரணமழித்தல் உழிஞை. பொருகளத்தில் எதிர்த்துப் போர் புரிதல் தும்பை. முடிவில் வெற்றி மாலை மிலைவது வாகை. இப்போர் ஒழுக்கம் ஒவ்வொன்றும் இடங் காலங்களுக் கேற்பப் பலதிறத் துறை வகுத்து நடக்கும். , இத்தகைய தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தி, எளிதில் எல்லோரும் தெளியுமாறு சிறிய இவ்வுரை நூலில் விளக்கிய அசிரியர் புலமைத் திறம் பாராட்டற்பாலது. போர்க் கொடியேற்றம், படைத்திறம், போர்க்களம், மறமானம், தானைவகை, நிலப்படை, கடற்படையாட்சி, கோட்டை கொத்தள மாட்சி, பேராண்மை, மாதர் வீரம், வீரக்கல், விருதுவகை எல்லாம் நிரல்படத் தொகுத்து, திறம்பட வகுத்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. புறநானூறு, திருக்குறள், பெருந்தொகை, புறத்திரட்டு முதலிய பெரு நூல்களும், அவை கூறும் அருந்திறற் செய்திகளும் இதில் அழகுற எடுத்து ஆளப்படுகின்றன. பண்டைத் தமிழர் போர் மரபும், மற மாண்பும், வீரர் அறப்பரிசும் எல்லாம் சிறிய ஒவ்வொரு நிரலே செறிய விளக்கும் பெற்றியும், இதன் பொருள் நிறைவும் சொல்வளமும் வியப்பொடு நயப்பும் விளைவிக்கின்றன. இந்நூலை அறிஞரெல்லாம் பாராட்டி வரவேற்று ஆதரிப்பர் என நம்புகிறேன். நூலுக்கு வாழ்த்தும், நூலாசிரியருக்குப் பல்லாண்டும் கூறுகிறேன்.
சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வுக்கோட்பாடுகள், திறனாய்வுகள், அக்கால மக்களில் வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய தேடல்களுக்கு தமிழர் வீரம் என்கிற இந்நூலானது மிக்க பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

