நற்றிணை குறிப்பு வரைக

நற்றிணை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.  நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.

 🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும்.  234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை.  திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். 

🌻 175 புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் யார் அறியக்கூடவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியாராவர்.

🌻 நற்றிணைப் புலவர்கள் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் – வண்ணப்புறக் கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங் கண்ணனார், தும்பிசேர்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் எனும் எழுவராவர்.

🌻நற்றிணைப் பாடல்கள் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பல பழக்க வழக்கங்களை அறியப் பெரிதும் துணை செய்கின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றையும் புலவர்களின் உவமைத்திறம், உள்ளுறை, உவமம் ஆகியவற்றையும் இதில் கண்டு தெளியலாம்.

🌻காதலன் பிரிவால் வருந்தும் தலைவி, தலைவன் வரவைச் சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கமும்,

🌻காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதும் நம்பிக்கையும்,

🌻காற்பந்து விளையாடும் வழக்கமும் மகளிர் வாழ்வில் இருந்ததை அறிய முடிகிறது.

🌻பிற்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்றிலக்கியமான ‘தூது’ எனும் இலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பண்பையும் இந்நூலில் காணலாம்.

🌻’நீரின்றமையாவுலகு’, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்’, குறட்கருத்துக்களையும் ‘விருந்தோம்பல்’ போன்ற பலவும் காணமுடிகிறது.

🌻இந்நூலில் 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் அறியமுடிவில்லை. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914 ஆம் ஆண்டில் இதற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவரை அடுத்து பிள்ளையவர்கள் விளக்கமான பேருரை ஒன்று எழுதி ஒளவை. துரைசாமிப்பிள்ளை  வெளியிட்டுள்ளார்.

🌻தலைவியின் தன்னிகரற்ற அன்பைக் கற்பனை வளத்துடனும், கவி நயத்துடனும் ஆங்காங்கு கையாளப் பட்டிருப்பதைக் காணலாம்.

🌻அதியமான அஞ்சி, அழிசி, ஆய்அண்டிரன். உதியன், ஓரி, காரி,  குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய வேந்தர்களும் குறுநில மன்னர்களும் நற்றினையில் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

🌻அறவாழ்வு, கொடை, ஆட்சித்திறம், பழக்க வழக்கங்கள் போன்ற சமூக வரலாற்றுச் செய்திகளையும் நற்றிணை தன்னகத்தே கொண்டுள்ளது.

🌻கண்ணகியின் வாழ்க்கையோடு ஒத்த திருமா உண்ணியின் வரலாற்றினை,

🌻”எதிலாளன் கவலை கவற்ற

ஒருமுலை இழந்த திருமா உண்ணி” – என்று நற்றிணை தெரிவிக்கிறது.

🌻நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே – நற். 32

🌻முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் தனிநாகரிகர்

என்னும் நற்றிணை அடிகள் நட்பின் சிறப்பினை நாட்டுவன

அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் – நற் 142

🌻 கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளான்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே – என்பவை பண்பாட்டு மேன்மை சாற்றும்

🌻 நீரின் றமையா உலகம் போலத்

தம்மின் தமையா நந்தயந்தருளி – நற்.1

🌻சாதல் அஞ்சேன் அஞ்சுவன் சாவில்

பிறப்புப்பிறிதாகுவது ஆயின்  

மறக்குவென் கொல்என் காதலன் எனவே

போன்ற நற்றிணைப் பாடல்கள் அக்காலப் புலவர்களின் நுண்ணறிவியலைப் புலப்படுத்தும்.

🌻திணை வாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை

1.குறிஞ்சித்திணை  = 130 பாடல்கள்

2.முல்லைத்திணை = 30 பாடல்கள்

3.மருதத்திணை = 32 பாடல்கள்

4.நெய்தல் திணை = 102 பாடல்கள்

5.பாலைத்திணை =  105 பாடல்கள்

ஒரு பாடல் கிடைக்கப்பெறவில்லை (234)

🌻 கூற்று வாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை

1.தோழிக்கூற்று = 218 பாடல்கள்

2.தலைவிக்கூற்று = 92 பாடல்கள்

3.தலைவன் கூற்று = 90 பாடல்கள்

4.செவிலி தாய் கூற்றுகள் = 11 பாடல்கள்

5.பரத்தை கூற்று = 12 பாடல்கள்

6.பாகன் கூற்று = 1 பாடல் 

7.கண்டோர் கூற்று = 3 பாடல்கள்

8.கூற்று அமையாதது = 1 பாடல்  

ஒருசில பாடல்கள் இரண்டு கூற்றுகளாகவும் வந்துள்ளன.

 

Leave a Reply

Translate »