சிலேடை அணி என்றால் என்ன?

Tnpsc Time_சிலேடை அணி
”ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி

தெரிவுதர வருவது சிலேடை ஆகும்” (தண்டி.பொருளணியியல்.24:1)

நூற்பா விளக்கம்
           
    ஒருவகை நின்ற சொற்றொடர் பல பொருட்களைப் புலப்படுத்துமாறு விளங்கி வருவது சிலேடை என்னும் அணியாகும்.
இரட்டுறமொழிதல் அணி என்ற வேறுபெயரும் உண்டு. (இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல் ) அதாவது, இரண்டு பொருள்பட அமைத்துக் கூறுதல் சிலேடை அணி எனப்படும். இது,

1.செம்மொழி சிலேடை

2.பிரிமொழி சிலேடை என இரு வகைப்படும்.

1.செம்மொழி சிலேடை

      இது ஒரே வகையாய் நின்று பல பொருள் தருவது ஆகும்.

(உம்)   “செங்கரங்க ளால்இரவு நீக்கும் திறம்புரிந்து
           
பங்கைய மாதர் நலம்பயிலப் – பொங்குதயத்து
           
ஓராழி வெய்யோன் உயர்ந்த நெறியொழுகும்
           
நீராழி நீணிலத்து மேல்”

சூரியனையும் அரசனையும் ஒன்றாக அமைத்து இரண்டு பொருள்பட கூறுகின்றார் ஆசிரியர்.

சூரியன்

1.சிவந்த கதிர்களால் உலகத்தில் இருளை நீக்குகிறான் கதிரவன்

2.தாமரை மலர்க்குக் காதலனாகி நலம்புரிந்து மலரச்செய்கின்றான்.

3.ஒற்றைச் சக்கரம் உடைய தேரில் சூரியன் கடலால் சூழப்பட்ட நீண்ட நிலத்தின் மேல் ஒளிபரப்பி ஆள்கிறான்.

அரசன்

1.சிவந்த கரங்களால், மன்னன் வறியவர்களின் வறுமையை நீக்குகிறான்.

2.தாமரை மலரின் மீது விளங்கும் திருமகளின் செல்வம் பெருகுமாறு நலத்தைப் புரிகிறான்.

3.ஆட்சி அதிகாரம் உள்ள மன்னனோ, கடல் சூழ்ந்த இவ்பெரிய உலகத்தை நீண்டு ஆள்கிறான்.

2.பிரிமொழி சிலேடை
           
    இது ஒரே வகையாய் நின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பல பொருள் கொள்வதாகும்.

(உம்)   ”தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
           
எள்ளா வரிமான் இடர்மிகுப்ப – உள்வாழ்தேம்
           
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
           
நந்தும் தொழில்புரிந்தோர் நாடு”
           
இப்பாடலில் சோழ மன்னன்பால் நட்பு கொண்டு ஒழுகும் நாடு வளமுடையதாக இருந்ததாகவும், அவனைப் பகைத்தவர்களின் நாடு அழியும் என்றும் பொருந்துமாறு இருபொருள்பட சிலேடையாகக் கூறப்பட்டுள்ளது.

நட்பு ஒழுகும் நாடு

1.சோழனாகிய அழகிய உள்ளம் மகிழும்படி அவனின் ஆணைகளை ஏற்றுச் செயல்படும் நாடானது நல்ல நிலங்களில் ஏர் செய்து பெரிய தாமரைகளைப் பெயர்த்து குறைவுபடாத நெல் கதிர்களை அரிகளாகக் கட்டி மானிடர்கள் உழவுத்தொழில் செய்து வளத்தை பெருக்கினார்களாம்.

2. அம்மக்களுடைய உள்ளமானது மகிழ்ச்சியுடன் விளங்கும் தகைமையுடையதாகும்.

பகைத்தவர்களின் நாடு

1.சோழனின் மனம் ஊறு விளைவிக்கும்படி பகைமை பாராட்டி வினைகளைப் புரிந்தவர்களின் நாடானது, அசையாத விடத்தேர் என்னும் மரம் உடையதாயும், பெரிய மலை சிகரங்களைில் வாழும் மானினங்களை அச்சமுறும் சிங்கத்தின் குட்டிகள் துன்பங்கள் புரியும் தன்மையுடைதாக விளங்கும்.

2.அம்மக்களின் உள்ளத்தில் இனிமையானது அழியும் தன்மையுடையாக விளங்குமாம்.

இங்கு,

நட்பு நாட்டிற்குப் பொருள் காணும்போது – ஏர், அரி, மானிடர் எனவும்,

பகை நாட்டிற்குப் பொருள் காணும்போது – விடத்தேர், தாவுமரை, அரிமான் எனவும் சுட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Translate »