🔔இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அப்பழைய உரையோடு தன் விளக்கத்தினையும் சேர்த்து டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1903-ல் இந்நூலை முதன்முதலில் வெளியிட்டார்.
🔔அதன்பின் இதற்கு ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையெழுதி வெளியிட்டார். இதன் 129, 130 ஆகிய இரு பாடல்களும் மறைந்து போயின.
🔔நூறு பாடல்களின் பகுதிகளாகக் காணப்படும் ஒவ்வொரு பத்தும், பொருளமைப்பினாலோ அன்றி அப்பாக்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனிப் பெயர்கள் பெற்றன.
🔔வேட்கைப்பத்து, வேழப் பத்து, தெய்யோப் பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியினால் பெயர் பெற்றவை.
🔔பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பால் பெயர் பெற்றன.
🔔தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
🔔அன்னாய் பத்து சொல்லாட்சியும், பொருளமைதியும் பொருந்தியது.
🔔எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும் ஐங்குறுநூறூம் பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதிகளைக் கொண்டு ஒரே மாதிரி உருவாக்கப்பட்டுள்ளன
🔔ஐங்குறுநூற்றில் ஆதன், அவினிகுட்டுவன். கடுமாள், கிள்ளி போன்ற மன்னர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
🔔துறைக் குறிப்புகள் இந்நூலின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் விரிவான துறைக்குறிப்புகள் அமைந்திருத்தல் தனிச்சிறப்பாகும்.
🔔துறைக் குறிப்புகளில் சூழல், கூறுவோர், கேட்போர் ஆகிய திறம் இடம் பெறும்.
🔔பிற அகநூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் அளவில் பெரிய பாடல்கள் தமக்குரிய சூழலைத் தாமே விளக்குவனவாய் இருத்தலால், சிறிய துறைக் குறிப்புகள் உடையனவாக உள்ளன.
🔔ஆனால், அடியளவு சிறிதாக உள்ள இந்நூலில், நீண்டமையும் துறைக்குறிப்புகள் பாடல் பின்னணி, முன் நிகழ்ச்சி, முந்தைய உரையாடலில் நிகழ்ந்த கூற்று ஆகியவற்றை நன்கு விளக்குகின்றன.
🔔சங்க அகப்பொருள் மரபை மீறாமலும், அதனை வலியுறுத்திக் காப்பனவாகவும் தொல்காப்பிய நூற்பாத் தொடரையே கொண்டு அமைந்த துறைக் குறிப்புகளும் இந் நூலில் காணப்படுகின்றன.
🔔பாத்திரங்களின் கூற்று பெயர் சுட்டாத அகத்திணை மரபு காரணமாகவும், உணர்வுகளுக்கு முதன்மை அளிப்பதாலும் இந்நூலில் உள்ள பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன.
🔔ஒரே பாத்திரக் கூற்று ஒற்றை நடிப்பு போன்றும், பல பாத்திரங்கள் கூற்று நாடகத் துறைக்குரிய கள அமைப்புக் கொண்டும் திகழ்கின்றன.
🔔20 பத்துகள் ஒருவர் கூற்றிலும், 16 பத்துகள் இருவர் கூற்றிலும், 10 பத்துகள் மூவர் கூற்றிலும், இரண்டு பத்துகள் நால்வர் கூற்றிலும், தலா ஒரு பத்துகள் ஐவர் மற்றும் அறுவர் கூற்று களிலும் அமைந்துள்ளன.
🔔இந்திர விழா (62), மார்சுழி நீராடல் (84) தொண்டி கொற்கை போன்ற துறைமுகங்கள் (171, 185) போன்றவை. குறிப்பிடப்பட்டுள்ளன.
🔔நெய்தல் திணைப்பாடல்களில் பேதைப் பருவ மகளிரின் விளையாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
🔔தேனூர். தொண்டி ஆமூர், வயலூர் போன்ற ஊர்கள் சுட்டப்பட்டுள்ளன.
🔔இவற்றின் அடிக் குறிப்புகள் பொருத்தமுடையளவாகவும், விளக்கமாகவும் பழமையுடையனவாகவும் விளங்குகின்றன.
🔔தொல்காப்பியம் முதலான நூல்கள் அனைத்தும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்றே வரிசைப்படுத்தியிருக்கின்றன. இந்நூல் ஒன்றே மருதத்திணையை முதற்கண் வைத்துக் கூறுகின்ற நூலாகும்.
🔔முதல் பொருள், கருப்பொருள், உரிப் பொருள் ஆகிய மூன்றையும் குறைவின்றிக் கூறும் சிறப்பினையும் இந்நூலின்கண் காணலாம்.
🔔கபிலர் பெருமானின் பாடல்களில் குறிஞ்சி நில இயற்கை எழிலைக் காணலாம்.
🔔ஓரம்போகியாரின் மருதத் திணைப் பாடல்களிலோ உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்தனவாக விளங்குகின்றன.
🔔இந்நூலில் விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப் பத்து எனப் பெயரமைத்து அகப் பொருட் கருத்துக்கள் அழகு விளக்கியுரைக்கப்பட்டுள்ளன.
🔔இந்நூலில் உள்ள பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் எவரும் இயற்றாதது எண்ணத்தக்கது.
🔔திணைக்கு 100 பாடல்கள் என்னும் தொகுப்பால் ‘சதகம்’ என்னும் இலக்கிய வகையும், பத்துப் பாடல்கள் என்னும் தொகுப்பு முறையால் ‘பதிகம்’ என்னும் வகையும், அந்தாதி முறையில் அமைந்த தொண்டிப் பத்தால் அந்தாதி என்னும் இலக்கிய வகையும் தோன்ற, இந்நூல் முன்னோடியாய்த் திகழ்கிறது.
🔔வெறிப்பத்து, வேட்கைப் பத்து, மறுதரவுப் பத்து ஆகியன, சங்ககாலச் சடங்குகளை வெளிப்படுத்தும் விதமாய் அமைதலோடு, திருவாசகத்திற்கு முன்னோடியாகவும் விளங்குகின்றன.
🔔பெற்றோர் இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்ற செய்தியை அறிய முடிகின்றது.
🔔போரில் வீரமரணம் அடைந்தோர்க்கு நடுகல் நாட்டி, வழிபாடு செய்த தன்மையை உணரமுடிகின்றது.
🔔பெற்றோர்தம் மகள். மணவாழ்விற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டனள் என்பதனை உலகிற்கு உணர்த்த நிகழ்த்தும் ‘சிலம்புகழி நோன்பு’ குறித்து இந்நூல் தெரிவிக்கிறது.
🔔தாய் முகம் நோக்கியே ஆமைக்குட்டிகள் வளரும் என்ற உண்மையையும்,
🔔முதலைகள் தம் குட்டிகளைபே கொன்று தின்றுவிடும் என்னும் செய்தியையும் சொல்கிறது. வனப்பும் சிறப்பும்
🔔”அம்மை’ எனும் வனப்பு, நூல் முழுவதும் அமைந்திருக்கிறது. இந்நூல் சீரிய, கூரிய தீஞ்சொற்களைச் செவ்விய முறையில் புனைந்திருப்பதால், ‘அழகு’ என்னும் வனப்பையும் பெற்று விளங்குகின்றது.
🔔இந்நூல் காதல் வாழ்வைப் பாடும் நூலாதலால், உள்ளுறை உவமம், இறைச்சி ஆகிய குறிப்புப்பொருளும், நுண் பொருளும் பெற்றுத் திகழ்கிறது.
🔔சிறந்த உவமை நலன்கள் பெற்ற இந்நூலில் உள்ள பாடல்கள் பல, ஏனைய அகப்பாடல்களைவிட, உரிப்பொருளைச் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தலில் தனக்கு நிகர் தானே என்னும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
பாடல் சிறப்புக்கள்
அழகான தலைவி இருக்க தலைவன் அவளை விடுத்து பரத்தை வீடுநாடிச் சென்று இன்பம் துய்த்துப்பின் மீண்டும் தலைவியை நாடி வருகின்றான். அவனுக்கு அவன் செயலின் சிறுமையை உணர்த்த விரும்பிய தோழி, இயற்கை எழிலைப் பயன்படுத்தி விளிப்பதன் மூலம் உள்ளுறையாக இலைமறை காயாக, தலைவன் நெஞ்ச நோகாதபடியும் அதே நேரத்தில் தோழியின் முற்றிய புலமைக்கும் சொல்லாற்றலையும், அறிவுக் கூர்மையையும் விளக்குவதாய், ஆசிரியரின் சான்றாக விளங்கக் காணலாம்
‘நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன்’
என்று வருணிக்கின்றார். அதாவது அழகான அரும்புகள் நிறைந்து காணப்படும் காஞ்சிமரத்தின் கிளைகளில் தாவிப்பாய்ந்து விளையாடி, மறுபடியும் நீரில் விழுகின்ற சிறு மீன்களை மிகுதியாகக் கொண்ட மருத நிலங்களுக்குத் தலைவனே என்று தோழி, தலைவனை விளிப்பதன் மூலம், ‘நறுமணம் கொழிக்கும் மலர்கள் செறிந்த கொம்புகளில் புலால் நாறும் மீன்கள் துள்ளித் திரிவது போல, காமப் பரத்தையர் கூட்டத்தில் திளைத்த தலைவன், கற்புமணம் கமழும் தலைவியைத் தீண்ட வருகின்றானே!’ என்னும் உள்ளுறைப் பொருளை விளக்குகின்றாள். பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி யூரன்’ என்னும் பாடலிலும், ‘பரத்தையின் உறவு புலனுக்கு விருந்தாய் அந்த குறித்த நேரத்திற்கு மாத்திரமே துணையாக அமைவது. ஆனால் தலைவியின் நேயமோ, எக்காலத்திற்கும் ஏற்றதாகக் திகழும்’ என்னும் ஒப்பற்ற கருத்தை உள்ளுறையாக உரைத்திருப்பதனையும் காணலாம். குறிஞ்சித் திணைப்பாடல்களில் இயற்கைக் காட்சிகளும், மருதத்திணைப் பாடல்களில் உள்ளுறை இறைச்சிகளும் மண்டியுள்ளன.
“பூத்த கரும்பில் காய்த்த நெய்லிற்
கழனியூரன்“
என்ற அடிகளில் தலைவனின் ஊரில் பூத்த கரும்பு போன்ற பயனற்ற பரத்தையும் மணிமுற்றிக் காய்த்த நெல் போன்ற பயனுள்ள தலைவியும் உள்ளார்கள் எனக்கூறிப் பரத்தையரைத் தலைவி இழித்துரைத்தல் உள்ளுறையாம்.
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருசு இரவலர்
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
பகைவர் புல்லார்க பார்ப்பார் ஒதுக
பசியில் லாகுசு பணிசேண் நீங்குக
வேந்து பணிதணிக யாண்டுபல நந்துக
அறம்நனி சிறக்க அல்லது கெடுக
என்ற அடிகளில் மக்களின் விருப்பமும் பண்பும் எதிரொலிக்கும்.
”அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய – அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே”
என்னும் பாட்டில் தலைவியின் மாண்பு புலப்படும்.
ஐந்து புலவர்கள்
ஓரம்போகியார்
‘ஓரம்போகியார்’ என்ற இப்புலவரின் பெயர் பாட பேதமாக ஒரேர் போகியார், ஒன்னார் உழவர், கரம்போகியார் எனத் திரிந்து காணப்படுகின்றது. சேரமான் ஆதன் எழினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன் என முடிமன்னர் மூவரையும் ‘விராஅன்’ மற்றும் ‘மத்தி’ என்னும் இருவர் பற்றியும் இப்புலவர் பாடியுள்ளார். தேனூர், ஆமூர், இருப்பை, கழார் என நான்கு ஊர்களையும், நதிகளில் காவிரி, வையை ஆகியன பற்றியும் பாடியுள்ளார்.
அம்மூவனார்
அம்மூவனார் என்ற புலவர் சேர, பாண்டியராலும், திருக்கோவலூரையாண்ட ‘காரி’ என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் முதலான நகரங்களும் இவரால் சிறப்புறப் பாடப்பட்டுள்ளன. நெய்தல் நிலம் பற்றிப்பாடுவதில் இவர் வல்லவர்.
கபிலர்
‘குறிஞ்சிக்கோர் கபிலன்’ எனப் புகழப் பெறுபவரான இப்புலவர், பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர். பாரி வள்ளலின் ஈடு இணையற்ற நண்பர் குறிஞ்சித்திணை நூறு இவரால் பாடப்பட்டவை.
ஓதலாந்தையார்
இவர் கடைச் சங்கப்புலவர்களுள் ஒருவர். அறக்கருத்துகளைத் தம் பாடல்களில் அதிகமாக வலியுறுத்தியுள்ளார். பாலைத் திணையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பெரும்பான்மையாகக் கூறப்படினும், தலைவி, தலைவனை மணந்து அவனுடன் இனியனாய்ச் சென்ற நிகழ்வினை இடைச்சுரத்து மக்களிடம் கேட்ட செவிலி, அதனை நற்றாய்க்குக் கூறும் செய்யுளை ஈற்றில் வைத்து இத்திணைக்கு மங்கல முடிவு கொடுத்துள்ளார்.
பேயனார்
இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். முல்லை நிலம் பற்றிப் பாடுவதில் வல்லவர். ஐங்குறுநூற்றைத் தவிரக் குறுந்தொகையில் மட்டுமே இவருடைய பாடல்கள் உள்ளன.